search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழைநீர் கால்வாய்"

    • பழைய மாமல்லபுரம் சாலையில் மழைநீர் கால்வாய்க்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளது.
    • கால்தவறி கால்வாய் பள்ளத்திற்குள் விழுந்து விட்டார்.

    திருப்போரூர்:

    திருப்போரூரில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஆங்காங்கே சாலையோரத்தில் பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளன.

    இதேபோல் திருப்போரூர் பழைய மாமல்லபுரம் சாலையில் மழைநீர் கால்வாய்க்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளது. பணிகள் பாதி முடிந்து உள்ள நிலையில் கான்கிரீட் கம்பிகள் அப்படியே நீட்டிக்கொண்டு உள்ளன. அந்த இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் திருப்போரூர் பகுதியில் தங்கி கொத்தனார். வேலை பார்த்து வரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரமேஷ் (35) என்பவர் நேற்று இரவு பழைய மாமல்லபுரம் சாலையில் மழைநீர்கால்வாய் பணி நடைபெற்ற இடம் வழியாக நடந்து வந்தார்.

    அப்போது அவர் கால்தவறி கால்வாய் பள்ளத்திற்குள் விழுந்து விட்டார். இதில் அவரது வயிற்றில் கம்பி குத்தி ரத்தம் வெளியேறியது. இரவு நேரத்தில் அந்த பகுதி வழியாக மக்கள் நடமாட்டம் இல்லாததால் வயிற்றில் கம்பி குத்திய நிலையில் கிடந்த ரமேசை யாரும் கவனிக்கவில்லை. அவர் விடிய, விடிய அப்படியே உயிருக்கு போராடியபடி கிடந்தார்.

    இன்று அதிகாலை அவ்வழியே சென்றவர்கள் கால்வாய் பள்ளத்துக்குள் ரமேஷ் உயிருக்கு போராடியபடி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் உதவியோடு மீட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருப்போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். மழைநீர் வடிகால்வாய் பணி நடைபெறும் இடத்தில் பாதுகாப்புக்காக அடைப்புகள் எதுவும் வைக்காமல் ஆபத்தான நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    • கால்வாய் மூலம் அத்திப்பட்டு புதுநகர் வழியாக சென்று கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.
    • தரமான தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் தாழ்வான பகுதி ஆகும். இங்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி வழியாக வல்லூர், கொண்டக்கரை, குருவி மேடு, கவுண்டர்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வெளிவரும் மழை நீர், கால்வாய் மூலம் அத்திப்பட்டு புதுநகர் வழியாக சென்று கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.

    மழைக்காலங்களில் இந்த கால்வாயில் அதிக அளவு தண்ணீர் பாய்ந்து செல்லும். அத்திப்பட்டு புதுநகர் தாழ்வான பகுதி என்பதால் மழைநீர் ஊருக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படுவதை தடுக்க அங்குள்ள தாங்கல் நீர்நிலை இடத்தில் வல்லூர் தேசிய அனல் மின் நிலைய சமூக மேம்பாட்டு நிதி மூலம் கடந்த 3 மாதத்துக்கு முன்பு ரூ.50 லட்சம் மதிப்பில் மழைநீர் கால்வாயில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டது.

    இந்த தடுப்பு சுவர் தரமாக கட்டப்படாததால் ஆங்காங்கே வெடிப்பு ஏற்பட்டு சுமார் 50 அடி நீளத்திற்கு உடைந்து விழுந்து உள்ளது. இதனால் பலத்த மழை பெய்யும் போது இந்த கால்வாய் வழியாக கொசஸ்தலை ஆற்றுக்கு பாய்ந்து செல்லும் தண்ணீர் தாழ்வான பகுதியான உடைந்த கரைகள் வழியாக அத்திப்பட்டு புதுநகர் கிராமத்திற்குள் புகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    இதனை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முறையாக அளவீடு செய்து நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றி தரமான தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் சிவராசு திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • ஆய்வின்போது நகராட்சி ஆணையர் கோபிநாத், நகர்மன்ற தலைவர் டாக்டர் பரிமளா விஸ்வநாதன் உடன் இருந்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணியை நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் சிவராசு திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொன்னேரி புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், பொன்னேரி, திருவெற்றியூர் சாலை பகுதியில் மழைநீர் கால்வாய் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு பணியை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.ஆய்வின்போது நகராட்சி ஆணையர் கோபிநாத், நகர்மன்ற தலைவர் டாக்டர் பரிமளா விஸ்வநாதன் உடன் இருந்தனர்.

    • மழைநீர் கால்வாய் பணியில் போதுமான தடுப்புகள் அமைக்கப்பட வில்லை என்று தெரிகிறது.
    • போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    திருவொற்றியூரை சேர்ந்தவர்கள் ஸ்ரீதேவி(40), கலைவாணி(30). உறவினர்களான இருவரும் மாற்றுத்திறனாளிகள். நேற்று மாலை அவர்கள் இருவரும் 3 சக்கர மொபட்டில் திருவொற்றியூர் நோக்கி சேர்ந்து சென்று கொண்டு இருந்தனர்.

    மண்ணடி, வடக்கு கடற்கரை ராஜாஜி சாலையில் சென்றபோது அங்கு சாலையோரம் இருந்த சேதம் அடைந்த பாதாள சாக்கடை மூடியின் மீது மொபட் மோதியது. இதில் ஸ்ரீதேவியும், கலைவாணியும் அருகில் நடைபெற்ற மழை நீர் வடிகால் பணிக்கு போடப்பட்டு இருந்த கான்கி ரீட் கம்பி மீது விழுந்தனர்.

    ஸ்ரீதேவிக்கு கை, நெற்றியிலும், கலைவாணிக்கு வயிற்றுப் பகுதியிலும் கம்பி குத்தி பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டுஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சகிச்சை பெற்று வருகிறார்கள். பாதாளசாக்கடை மூடி கடந்த சில நாட்களாக சேதம் அடைந்து உள்ளது. இதனால் அதில் கற்கள் மற்றும் செடிகளை போட்டு வைத்து உள்ளனர். அதன் மீது ஸ்ரீதேவி, கலைவாணி வந்த மொபட் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. மேலும் அருகில் நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் பணியில் போதுமான தடுப்புகள் அமைக்கப்பட வில்லை என்று தெரிகிறது.

    இது குறித்து கொத்தவால் சாவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து நடந்த பின்னர் அந்த இடத்தில் புதிதாக பாதாள சாக்கடை மூடி போடப்பட்டு உள்ளது.

    • மண்டல உதவி ஆணையர் நவேந்திரன் முன்னிலை வகித்தார்.
    • குடிநீர் பிரச்சினையை போக்க கவுன்சிலர்கள் மனு அளித்தால் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    திருவொற்றியூர்:

    சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் நடைபெற்றது. மண்டல உதவி ஆணையர் நவேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் எம்.ஆர்.எப்., சாலை 83 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்துதல் உள்ளிட்ட 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து மண்டல குழு தலைவர் தனியரசு பேசுகையில், குடிநீர் பிரச்சினையை போக்க கவுன்சிலர்கள் மனு அளித்தால் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கடலோரப் பகுதிகளில் 3000 தெரு விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் கால்வாயில் முறைகேடாக இணைக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளை கண்டறிய குழு அமைக்கப்படும் அவ்வாறு கண்டறியப்பட்டு மழை நீர் கால்வாயில் கழிவு நீரை விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றார்.

    • தனியார் தொழிற்சாலை நிர்வாகம் மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து, கட்டிட கழிவுகளை கொட்டியுள்ளது.
    • நீரோடை கால்வாயை முற்றிலுமாக தூர்வாராவிட்டால் மழை நேரங்களில் கிராமப் பகுதியில் வெள்ள அபாயம் ஏற்படும்.

    பொன்னேரி:

    சோழவரம் அடுத்த வெள்ளி வாயல் ஊராட்சியில் உள்ள மழை நீர் கால்வாய்வழியாக அருமந்தை, வழுதிகை மேடு, விச்சூர், ஞாயிறு, திருநிலை, முல்லைவாயல், கிராமங்களில் இருந்து மழை நீர் கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.

    இந்நிலையில் தனியார் தொழிற்சாலை நிர்வாகம் மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து, கட்டிட கழிவுகளை கொட்டியுள்ளது. இதனால் மழைநீர் செல்வது தடைபட்டு ஊருக்குள் வெள்ளம் சூழும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக வெள்ளிவாயல் ஊராட்சியை சேர்ந்த பொது மக்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்காததால் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

    நீரோடை கால்வாயை முற்றிலுமாக தூர்வாராவிட்டால் மழை நேரங்களில் கிராமப் பகுதியில் வெள்ள அபாயம் ஏற்படும் என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி கால்வாய் அருகில் பந்தல் அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குபரபரப்பு ஏற்பட்டது.

    • பாலவாக்கம், கொட்டிவாக்கம், சோழிங்கநல்லூர், அக்கரை பகுதியில் நிலம் கையயகப்படுத்தப்படுகிறது.
    • .8 மாதங்களில் சாலை விரிவாக்கம் முடிந்து விடும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை மிகவும் முக்கிய பாதையாகும். புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், வேளாங்கன்னி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல இந்த சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த சாலை திருவான்மியூர் முதல் அக்கரை வரை 10.5 கி.மீ. நீளமுள்ள 60 முதல் 70 அடி வரை அகலத்தில் நான்கு வழி சாலையாக உள்ளது.

    கிழக்கு கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருப்பதை ஆய்வு செய்து 2008-ம் ஆண்டில் அணுகு சாலை, வடிகால் நடைபாதையுடன் ஆறுவழி சாலையாக மாற்றும் பணி தொடங்கியது. இந்த பகுதியில் 6 வருவாய் கிராமங்கள் உள்ளன.

    கொட்டிவாக்கம், பாலவாக்கம் கிராமத்தில் பெரும்பாலானவருக்கு இழப்பீடு வழங்கி நிலம் கையகப்படுத்தி சாலை விரிவாக்கம் பணி கடந்த ஆண்டு தொடங்கியது.

    இந்த நிலையில் நிலம் கையகப்படுத்தும் பணி மீண்டும் வேகமாக நடக்கிறது. பாலவாக்கம், கொட்டிவாக்கம், சோழிங்கநல்லூர், அக்கரை பகுதியில் நிலம் கையயகப்படுத்தப்படுகிறது.

    5 அடி அகலம், 5 அடி ஆழத்தில் மழைநீர் வடிகால் கட்டப்படுகிறது. ஆங்காங்கே 200, 300, 500 மீட்டர் நீளம் என 4 கி.மீ. நீளத்தில் வடிகால் கட்டப்படுகிறது. ஒவ்வொரு 30 மீட்டர் இடைவெளியில் மழைநீர் வடிகாலுக்குள் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட உள்ளது.

    மேலும் கட்டப்படும் வடிகாலில் கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் மழைநீர் சேரும் வகையில் சாலையின் குறுக்கே 9 இடங்களில் நீர்வழித் தரைப்பாலம் அமைக்கப்பட உள்ளது.

    இதே வேகத்தில் பணிகள் நடந்தால் நான்கு வழி சாலை அடுத்த ஆண்டு ஆறு வழி சாலையாக மாறும்.

    நிலம் கையகப்படுத்தும் இடங்களில் வடிகால் கட்டி வருகிறோம். இரு திசைகளில் வடிகால் பணி முடிந்ததும் சாலை விரிவாக்கம் செய்யப்படும். 8 மாதங்களில் சாலை விரிவாக்கம் முடிந்து விடும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பொதுமக்கள் தண்ணீர் வடியும் வரை வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்படும்.
    • மழைநீர் செல்லக்கூடிய கால்வாய்கள் அமைக்காமல் சாலை அமைப்பதும், சாலையின் சந்திப்பில் சிறு பாலங்கள் அமைப்பதும் பயனற்றது.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட 5- வது வார்டு பகுதியில் உள்ளது. வி.ஐ.பி நகர் குடியிருப்பு . இந்த பகுதியில் 100 - க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த புதிய குடியிருப்பு பகுதி முறையான சாலை வசதி இல்லாத தாழ்வான இடம் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் இடுப்பளவிற்கு மேல் மழை தண்ணீர் தேங்கி நிற்கும். பொதுமக்கள் தண்ணீர் வடியும் வரை வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்படும்.

    எனவே இந்த பகுதியில் சாலை அமைத்து,மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த கோரிக்கையை ஏற்று பேரூராட்சியின் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.41 லட்சத்தில் தார் சாலைகள் மற்றும் 6 சிறு பாலங்களை அமைக்க பணிகள் செய்வதற்காக கடந்த ஜனவரி மாதம் ஒப்பந்தம் விடப்பட்டது . 90 நாட்களுக்குள் பணிகள் முடிவடைய வேண்டும் என திட்ட காலம் தீர்மானித்து டெண்டர் விடப்பட்டது.

    அதன்படி,டெண்டர் விடப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் இதுவரை பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது.

    மேலும், தற்பொழுது தான் ஒரு சாலையின் சந்திப்பு பகுதிகளில் மற்றும் சாலையின் முகப்பு பகுதியில் மழை நீர் செல்லும் 6 சிறு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்தப் பகுதியில் திட்டமிட்டபடி கால்வாய்கள் அமைக்காமல் சாலை மற்றும் சிறு பாலங்கள் அமைப்பதால் வரும் மழை காலத்தில் தண்ணீர் கால்வாயில் செல்ல முடியாமல் சாலையில் செல்லும் நிலை ஏற்பட்டு சாலைகள் பெயர்ந்து முழுவதும் வீணாகி விடும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

    எனவே மழைநீர் செல்லும் வகையில் கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இதேபோல் சாலை மற்றும் சிறு பாலங்கள் அமைக்கும் பணியையும் உடனடியாக முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் மழைக்காலத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்கும். தண்ணீர் செல்ல வழி இல்லாததால் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி மழை காலங்களில் கடும் சிரமம் அடைந்து வருகிறோம்.

    எனவே இந்த பகுதியில் கால்வாய் அமைத்து சாலை வசதி செய்து தர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்தோம். அதனை ஏற்று சாலை மற்றும் கால்வாய் அமைப்பதற்கான பணிகள் இறுதி செய்யப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி இன்னும் முடிக்கப்படவில்லை.

    மழைநீர் செல்லக்கூடிய கால்வாய்கள் அமைக்காமல் சாலை அமைப்பதும், சாலையின் சந்திப்பில் சிறு பாலங்கள் அமைப்பதும் பயனற்றது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது குறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, வி.ஐ.பி. நகர் பகுதியில் முதலில் சாலைகளும், சிறு பாலங்களும் அமைப்பதற்கு தான் நிதி ஒதுக்கப்பட்டது.ஆனால் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளோம் என்றனர். அச்சரப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட வி. ஐ பி நகரில் குடியிருப்பு பகுதிகளின் தேவைக்கேற்ப கால்வாய் அமைத்து சாலைகள் அமைத்த பின்னர் சிறு பாலங்கள் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும்என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

    • சாலையின் ஒரு புறத்தில் 50-க்கும் மேற்பட்ட தனியார் உணவகங்கள் கடைகள், செயல்பட்டு வருகிறது
    • கால்வாயில் கழிவு நீர் நிரம்பி தேசிய நெடுஞ்சாலை மற்றும் சர்வீஸ் சாலையில் பாய்ந்து தேங்கி நிற்கிறது.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த காரனோடை அருகே உள்ள ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலை வழியாக சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையின் ஓரத்தில் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது.

    சாலையின் ஒரு புறத்தில் 50 க்கும் மேற்பட்ட தனியார் உணவகங்கள் கடைகள், செயல்பட்டு வருகிறது. இந்த உணவகங்களின் கழிவுநீர் நெடுஞ்சாலையில் உள்ள மழைநீர் கால்வாயில் விடப்பட்டு உள்ளது.

    இதனால் கால்வாயில் கழிவு நீர் நிரம்பி தேசிய நெடுஞ்சாலை மற்றும் சர்வீஸ் சாலையில் பாய்ந்து தேங்கி நிற்கிறது. அவ்வழியே செல்லும் வாகனங்களில் கழிவுநீர் சிதறி மற்ற வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. மேலும் இந்த கழிவு நீரால் துர்நாற்றம் வீசுகிறது.

    இதுகுறித்து சோழவரம் வட்டார வளர்ச்சி ஆணையாளரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆணையாளர் குலசேகரன் ஒன்றிய குழு தலைவர் ராஜாத்திசெல்வசேகரன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு விசாரணை செய்தார்.

    அப்போது அரசு அனுமதி இல்லாமல் குடிநீர் இணைப்புகள் பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது இதனை தொடர்ந்து சாலையோரத்தில் உள்ள பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு அனுமதி இல்லாத 12 குடிநீர் குழாய் இணைப்புகளை துண்டிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். கால்வாயில் கழிவுநீர் விடுவதை தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆய்வின்போது அழிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி ரமேஷ், மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • ஆலந்தூரில் இருந்து வரும் அனைத்து கழிவுநீரும் இதில் கலப்பதால் தண்ணீர் நிறம்மாறி துர்நாற்றம் வீசுகிறது.
    • மழைநீர் வடிகால் பணியால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம் கக்கன் நகர், சிட்டி லிங்க் ரோடு ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் பணி சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு நடைபெற்று வருகிறது. கடந்த 8 மாதமாகியும் இந்த பணி முடிவடையாததால் சாலையோரத்தில் ஆறு போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    ஆலந்தூரில் இருந்து வரும் அனைத்து கழிவுநீரும் இதில் கலப்பதால் தண்ணீர் நிறம்மாறி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இந்த பகுதி முக்கிய சாலை என்பதாலும், வணிக வளாகங்கள் நிறைந்த பகுதி என்பதாலும் வாகன ஓட்டிகள், அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. வீடுகள், கடைகளுக்குள் கொசுக்கள் படையெடுத்து பதம்பார்த்து வருகின்றன. கொசுக்களை விரட்ட எடுக்கும் அனைத்து முயற்சிகளும் பலனிக்காமல் கொசுக்கடியால் தவித்து வருகிறார்கள்.

    இரவு நேரங்களில் வியாபாரிகளால் கடையில் இருக்க முடியாத நிலை நீடித்து வருகிறது. அவர்கள் கொசுவுக்கு பயந்து மாலையிலேயே கடையை அடைத்து அரை நாள் விடுமுறை விட்டுச் செல்லும் நிலை உள்ளது. இதேபோல் மழைநீர் வடிகால் பணியால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. பஸ்நிலையத்தில் பஸ்களை நிறுத்த முடியாத நிலை உள்ளதால் அங்கு நிற்க முடியாமல் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

    மேலும் இந்த வடிகால் வழியாக செல்லும் கழிவு நீர் அனைத்தும் வேளச்சேரி ஏரியில் கலக்கிறது. இதனால் ஏரி நீர் மாசு அடைவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • மழை நீர்வரத்து கால்வாய் பள்ளத்தில் குதிரை ஒன்று விழுந்து சிக்கிக்கொண்டது.
    • குதிரை கடந்த இரண்டு நாட்களாக பள்ளத்தில் விழுந்து சிக்கி இருப்பது தெரிய வந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் சின்ன ஈக்காடு பகுதியில் மழை நீர்வரத்து கால்வாய் உள்ளது. இந்த பள்ளத்தில் குதிரை ஒன்று விழுந்து சிக்கிக்கொண்டது. குதிரையால் மேலே வர முடியவில்லை. இதனை கண்ட அவ்வழியாக சென்ற பொதுமக்கள் திருவள்ளூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விநாயகமூர்த்தி, சிவக்குமார், அன்பரசு, சிலம்பரசன் அங்கு விரைந்து வந்து கயிறு கட்டி குதிரையை பத்திரமாக மீட்டனர். இந்த குதிரை கடந்த இரண்டு நாட்களாக பள்ளத்தில் விழுந்து சிக்கி இருப்பது தெரிய வந்தது. குதிரை யாருக்கு சொந்தமானது என்று தீயணைப்பு துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    • தலை மற்றும் வலது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.
    • வலது தொடையை இரும்பு கம்பி குத்திக்கிழித்துள்ளது.

    ஆலந்தூர் :

    சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலம் 175-வது வார்டுக்கு உட்பட்ட ஆதம்பாக்கம் கக்கன் நகர் மெயின் ரோடு, சிட்டி லிங்க் ரோடு ஆகிய சாலைகளில் பழைய மழைநீர் வடிகால்கள் உடைக்கப்பட்டு புதிய மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக கக்கன் நகர் மெயின் ரோட்டில் மழைநீர் கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு, அடிப்பகுதியில் இரும்பு கம்பிகள் கட்டி, சிமெண்டு ஜல்லிக்கலவை போடும் பணி நடைபெற்று வருகிறது.

    ஆதம்பாக்கம் கக்கன் நகர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 33). என்ஜினீயரான இவர், தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய வீட்டு வாசலிலும் மழைநீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. ஆனால் பள்ளத்தை சுற்றிலும் தடுப்புகள் அமைத்து போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் திறந்த வெளியில் விடப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் வாசுதேவன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குள் செல்ல முயன்றபோது, நிலை தடுமாறி மழைநீர் கால்வாய்க்கு தோண்டிய பள்ளத்தில் தலைகுப்புற விழுந்து விட்டார். அப்போது மழைநீர் கால்வாய் பணிக்காக போடப்பட்டு இருந்த இரும்பு கம்பி குத்தியதில் அவரது தலை மற்றும் வலது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதுடன், வலது தொடையை இரும்பு கம்பி குத்திக்கிழித்தது. படுகாயம் அடைந்த வாசுதேவன் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இரும்பு கம்பி குத்திய இடங்களில் தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    மழைநீர் கால்வாய் பள்ளத்தில் வாசுதேவன் தவறி விழுந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

    ×